தகவல் அறியும் உரிமைக்கு அரசாங்கமும் புலிகளும் மதிப்பளிக்க வேண்டும்.

வட போர்முனையான முகமாலைக் களமுனையில் பல நூற்றுக்கணக்கில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறிலங்காப் படையினரைச் சந்திக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் படையினரை புகைப்படம் எடுக்கச் சென்ற போது தாங்கள் அரசாங்க அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக 4 புகைப்பட ஊடகவியலாளர்கள் எம்மிடம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.

மருத்துவமனைகளுக்குள் ஊடகவியலாளர்கள் சென்று புகைப்படம் எடுத்து களமுனை பாதிப்புக்களை வெளியிடுவதில் எதுவித பிரச்சினையும் இல்லை.

வட போர்முனைக் களத்தில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற தீவிர மோதலில் நூற்றுக்கணக்கில் சிறிலங்காப் படைத்தரப்பு இழப்புகளைச் சந்தித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவப் பேச்சாளர்கள் அனைவருமே கள இழப்புக்களை ஆக மிகவும் குறைத்து அரசாங்க தரப்பு தகவல்களையே வெளியிடுமாறு நிர்ப்பந்திக்கின்றனர்.

கொழும்பிலிருந்து செயற்பட்டு வரும் சில வெளிநாட்டு செய்தி ஊடகங்களும் சில செய்தி இணையத்தளங்கள் மட்டுமே களமுனை இழப்புக்களை சுயாதீனமாக வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத் தரப்புத் தகவல்களின்படி 2008 ஆம் ஆண்டு மட்டும் 3,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் 6 மாதங்களுக்கு முன்பாக சிறிலங்கா இராணுவத் தளபதியோ 3,000 விடுதலைப் புலிகள்தான் இருப்பதாக கூறியிருந்தார்.

இலங்கையில் போர்க்களத்தில் நாளாந்தம் களமுனை இழப்புக்களே முதலாவது பலியாகிக் கொண்டிருக்கிறது என்பதையே இது நிரூபிக்கிறது.

ஊடகவியலாளர்களுக்கு தடைகளை விதித்து நடைபெற்று வரும் போர் தொடர்பிலான செய்திகளை மக்களைச் சென்றடைவது சீர்குலைக்கப்படு வருகிறது.

உண்மையா விபரங்களை போர்க் களத்தில் அறிவதற்கு விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் அனுமதிக்கவில்லை.

போர்க்களச் செய்திகளை சுயாதீனமாக சேகரிக்க ஊடகங்களை அனுமதிக்க வேண்டும் என்று எமது சுதந்திர ஊடக இயக்கம் 15 ஆண்டுகாலமாக போராடி வருகிறது.

தகவல் அறியும் உரிமைக்கு அரசாங்கமும் புலிகளும் மதிப்பளிக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply