1960 மார்ச் நடைபெற்ற தேர்தல் இனவாதத்தின் அடிப்படையிலே நடாத்தப்பட்டது. ஐனவரி 2ம் திகதி 60ம் ஆண்டிலிருந்து இலங்கையில் நிர்வாகமுறை சிங்கள மொழிக்கு மாற்றஞ்செய்யப்பட்டது. அன்றையதினம் தமிழ்ப் பகுதிகளில் தமிழரசுக்கட்சி பூரணகர்த்தாலை மேற்கொண்டது. எனவே மார்ச் 60 தேர்தலில் போட்டியிட்ட எல்லாக் கட்சிகளும் தமிழர்க்கு எதிரான இனவாதத்தைத் தமது வெற்றிக்கு வாய்ப்பாகப் பயன்படுத்த முயன்றனர்.
தகுந்த தலைமை இல்லாததால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் 46 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. தமிழரசுக்கட்சி 15 இடங்களைப் பெற்றது. ஐ. தே. க. 50 இடங்களைப் பெற்றது. இந்நிலையில் டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைத்தது. S .L. F. P யோ , தமிழரசுக்கட்சியோடு இரகசியப் பேச்சுக்களை நடாத்தியது. தமக்கு ஆதரவளித்தால் திரும்பவும் பண்டா-செல்வா உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியது.
இதை நம்பிய தமிழரசுக்கட்சி ஏப்பிரல் 1ம்திகதி நடந்த வாக்கெடுப்பில் ஐ. தே. க தோற்றடிக்கப்பட்ட பொழுதும் தமிழரசுக்கட்சி எதிர் பார்த்தது போல் S. L. F. P யில் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. ஏனென்றால் டட்லி தான் தோற்றடிக்கப்பட்டபின் நாடாளுமன்றத்தைக் கலைத்து யூலை 60ல் மீண்டும் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துவிட்டார்.
தமிழரசுக்கட்சியைப் பொறுத்த வரையில் அதனுடைய தலைமை எப்பொழுதுமே கொழும்புவாழ் மேட்டுக்குடித் தமிழரின் செல்வாக்கிற்கு உட்பட்டேயிருந்தது. அது போலவே இக்கால கட்டத்திற் திருச்செல்வம் எனப்படும் கொழும்பு வாழ் உயர் வழக்கறிஞர் ஒருவரின் முயற்ச்சியாலே சிங்களக்கட்சிகளோடு தரகுப்பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. ( இத்தகைய பேர்களுக்கு எதிராகச் செயற்பட்ட சி. வன்னியசிங்கம் என்பவர் 1959ம் ஆண்டே இறந்து விடுகிறார்.)