தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் 57ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இவற்றை நிறைவேற்றக்கோரி சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக தமிழரசுக்கட்சி அறிவித்தது. இதைத் தொடர்ந்து பண்டாரவிற்கும் செல்வாவுக்கும் இடையில் பல முறை பேச்சுக்கள் நடந்தன. இதன் விளைவாகவே 1957ம் ஆணடு பண்டா – செல்வா உடன்பாடு ஏற்பட்டது. இது ஒரு முக்கியமான உடன்பாடு. ஏனென்றால் இன்றுவரை செய்யப்பட்ட உடன்பாடுகளை விட கூடியளவு அதிகாரங்களை இவ்வுடன்பாடு வழங்கியது.
இதன்படி தமிழர் பகுதிகளில் பிரதேசசபைகள் (Regional Council) அமைக்கப்பட்ட வடக்கில் ஒன்றும் கிழக்கில் இரண்டோ அதற்கு மேலும் என உருவாக்கப்படும் இச்சபைகள் மாகாண எல்லைகளைக் கடந்து இணைக்கப்படவும் வழிவகுக்கப்பட்டது.
மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் இச்சபைக்கு, நாடாளுமன்றம் பின்வரும் அதிpகாரங்களை இச்சபைக்கு வழங்கவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. அவையாவன.
01 காணியும் காணி அபிவிருத்தியும்
02 விவசாயம் ( வேளாண்மைத் துறை )
03 கூட்டுறவுத் துறை
04 சுகாதாரம்
05 குடியேற்றத் திட்டங்கள்
06 கல்வி
07 கைத்தொழிலும் மீன்பிடித் துறையும்
08 சமூக சேவைகளும் வீட்டு வசதிகளும்
09 மின்சாரம்
10 வீதிகளும் நீர் விநியோகத் திட்டங்களும்தமிழரசுக் கட்சி தேசிய சிறுபான்மை இனத்தின் மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்படுமிடத்தும் வடக்கும் கிழக்கும் தமிழே அரசகரும மொழியாக இருக்குமிடத்தும் தமிழுக்குச் சம அந்தஸ்து என்கின்ற கோரிக்கையைக் கைவிடவும் சம்மதித்தது. இது போலவே மலையகமக்களுக்கான பிரசாவுரிமை வழங்கும் கோரிக்கையையும் தள்ளிப் போடச் சம்மதித்தது.
1957ம் ஆண்டு யூலை மாதம் 26ம் நாள் இவ்வுடன்பாடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் பண்டாரநாயக்கா எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. சுpங்களம் மொழி மட்டும் சட்டத்திற்கும் பாதிப்பு இல்லாமல் செயற்பட்டாற்போதும் என்றே அவர் நினைத்தார். ஆனால் சிங்கள இனவாதிகள் அவ்வாறு நினைக்கவில்லை. ஜே. ஆர் அவர்களும் அவரது ஐ.தே. கட்சியும் (தமிழனுக்கு நாடு பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டது ) என்று குரல் எழுப்பினார். 57ம் ஆண்டு ஒக்ரோபர் 4ம் திகதி களனி யாத்திரை என்று அழைக்கப்படும் பெரும் யாத்திரை ஒன்றை களனி ரஜமகாவிகாரையிலிருந்து கண்டி தலதா மாளிகை வரை நடாத்தப்பட்டது. அது மட்டுமன்றி டிசம்பர் மாதம் (57ம் ஆண்டு ) ஆங்கில முதலெழுத்துக்களுக்குப் பதிலாக வாகனங்களில் சிங்கள (சிறி ) எழுத்துப் பயன்படுத்தப்பட வேண்டும். எனச்சட்டம் கொண்டு வரப்பட்டது. உடனே தமிழரசுக்கட்சி பண்டா-செல்வா ஒப்பந்தத்தின்படி வடக்குக் கிழக்கில் சிங்கள சிறீ க்குச் சமமான தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும் எனக்கோரியது. ஆனால் இக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பதிலாக சிங்கள (சிறீ ) பொறிக்கப்பட்ட வண்டிகள் தமிழ்ப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. இதனால் தமிழரசுக்கட்சி 58ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து தமிழ் எழுத்துக்களை வாகனங்களில் பயன்படுத்துமாறு கோரியது. இதுவே சிறீ ) எதிர்ப்புப் போராட்டம் என அழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிலைமைகள் மோசமடையத் தொடங்கின. 58ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம்திகதி சுகாதார அமைச்சராக இருந்த திருமதி விமலா விஐயவர்த்தனா தலமையில் பிக்குகள் ஊர்வலமாகச் சென்று பண்டாரநாயக்காவின் வதிவடத்தின் முன்னாற் சென்று பண்டா – செல்வா உடன்பாட்டைக் கிழித்தெறியுமாறு கோரி அங்கேயே இருந்து கொண்டனர். பண்டாரநாயக்காவும் அவர்கள் விருப்பப்படியே உடன்பாட்டைக் கைவிடுவதாக எழுத்தில் எழுதிக் கொடுத்தார். அத்தோடு ஒப்பந்தத்தின் கதையும் முடிந்தது.